ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் சானியா மிர்சா ஜோடி – வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

கதிரவன்  கதிரவன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் சானியா மிர்சா ஜோடி – வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), உலக தர வரிசையில் 17-வது இடத்தில் பெர்னர்ட் டாமிக்கை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார்.

2½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6-4, 6-4 7-6 (7-4) என்ற நேர்செட்டில் பெர்னர்ட் டாமிக்கை வீழ்த்தி தொடர்ந்து 7-வது முறையாக கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதி ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 8-ம் நிலை வீரர் டேவிட் பெரரை (ஸ்பெயின்) சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிச், 4-ம் நிலை வீரர் வாவ்ரிங்காவுடன் (சுவிட்சர்லாந்து) மோதினார். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மிலோஸ் ராவ்னிச் 6-4, 6-3, 5-7, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சி அளித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.

2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வாவ்ரிங்காவுடன் 5-வது முறையாக மோதிய மிலோஸ் ராவ்னிச் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ‘டாப்-10’-க்குள் உள்ள வீரரை மிலோஸ் ராவ்னிச் சாய்த்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

கால் இறுதி ஆட்டத்தில் மிலோஸ் ராவ்னிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ்ச்சை எதிர்கொள்கிறார். 4-வது சுற்று ஆட்டத்தில் கேல் மான்பில்ஸ் 7-5, 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆந்த்ரே குஸ்னெட்சோவை (ரஷியா) தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6-4, 6-4, 7-5 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் செக் குடிரசின் பார்போரா ஸ்டைரிகோவாவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை அன்னிகா பெக்கை தோற்கடித்து முதல்முறையாக கால் இறுதிக்குள் நுழைந்தார். கால் இறுதியில் அஸரென்கா-ஏஞ்சலிக் கெர்பர் மோதுகிறார்கள்.

மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங் கனை மகரோவாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். 33 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீராங்கனை ஒருவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது முதல்முறையாகும். தகுதி சுற்று மூலம் களம் கண்ட சீன வீராங்கனை ஷ்வாய் ஷங் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மாடிசன் கெய்யை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு தகுதி சுற்று வீராங்கனையாக களம் கண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்குள் நுழைந்த முதல் வீராங் கனை என்ற பெருமையை ஷ்வாய் ஷங் பெற்றுள்ளார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)- மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா (ரஷியா)-ராபெர்டா வின்சி (இத்தாலி) இணையை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா மிர்சா-ங்கிஸ் இணை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ங்கிஸ் இணை தொடர்ந்து 33-வது வெற்றியை ருசித்து அசத்தியது. கால் இறுதியில் சானியா மிர்சா-ங்கிஸ் ஜோடி, அன்னா லீனா (ஜெர்மனி)-கோகோ வான்டீவெக் (அமெரிக்கா) இணையை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-யுங் ஜன் ஷான் (சீன தைபே) ஜோடி 4-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே ஹவாக்கோவா (செக் குடியரசு)-லுகாஸ் குபோட் (போலந்து) இணையை தோற்கடித்து கால் இறுதிக்குள் கால் பதித்தது.

2016-01-26

மூலக்கதை