சென்னையில் மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்

கதிரவன்  கதிரவன்
சென்னையில் மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக காந்தி சிலை அருகே மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

நாளை காலை 8 மணிக்கு விழா தொடங்கும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா விழாப் பகுதிக்கு காரில் வந்திறங்குவார். அவரது காருக்கு முன்னும், பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வருவார்கள்.

காரில் இருந்தபடி காமராஜர் சாலையில் இருபுறமும் கூடியிருக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை அவர் தெரிவிப்பார். விழா மேடைக்கு வரும் அவரை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்.

அவரைத்தொடர்ந்து, கவர்னர் கே.ரோசய்யா, விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வர காரில் வந்திறங்குவார். அவரும் பார்வையாளர்களுக்கு குடியரசு தினவாழ்த்துகளை தெரிவிப்பார்.

விழா மேடைக்கு வரும் கவர்னர் ரோசய்யாவை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்பார். தொடர்ந்து, முப்படை தளபதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளை கவர்னர் ரோசய்யாவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைப்பார்.

காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு இருந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவர்.

அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவும். அதைத்தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும்.

அதன் பின்னர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார், செயற்கைகோள் போன்றவைகளின் மாதிரிகளுடன் விமானப்படை வாகனமும்; நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனமும்; ராணுவ கனரக தொழிற்சாலை வாகனமும்; போர்க்கப்பலுடன் கடற்படை வாகனமும் அணிவகுத்து கொண்டுவரப்படும்.

அதனைத்தொடர்ந்து, போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண-சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொள்வார்.

அதைத்தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார். அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார். சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். பின்னர், பதக்கம் பெற்ற அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்வார்கள்.

அதன் பின்னர், கலை நிகழ்ச்சிகள் தொடங்கும். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் வண்ண வண்ண உடையணிந்து நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்துவர்.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும். சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து நிகழ்ச்சிகளும் காலை 9.30 மணிக்கு நிறைவு பெறும்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக, காந்தி சிலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் பி.தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், மேயர், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்கலைக்கழக துணை-வேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். முன்னதாக போர் நினைவு சின்னத்திற்கு சென்று கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள்.

இதற்கிடையே பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை காமராஜர் சாலையில் நேற்று நடந்தது. வாகன அணிவகுப்பில் இடம் பெறும் முப்படைகளின் வாகனங்கள் மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2016-01-25

மூலக்கதை