சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்பமனு: முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் மயிலாப்பூர் தொகுதிக்கு மனு

கதிரவன்  கதிரவன்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்பமனு: முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் மயிலாப்பூர் தொகுதிக்கு மனு

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சியாக உள்ள அ.தி.மு.க. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்தது. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலையும் வெளியிட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. சாதனைகளை விளக்கும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய பிரசார வாகனத்தையும் மாவட்டம் வாரியாக வழங்கி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து கடந்த 20-ந்தேதி முதல் விருப்பமனு வாங்கி வருகிறது. இதற்காக ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மற்றும் கேரளா சட்ட மன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்குவதற்கு தனியே கவுண்ட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று விருப்பமனுக்களை பெற்றனர். முதல் நாளில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் போட்டி போட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் விருப்பமனு பெற்று, தாக்கல் செய்தனர்.

நேற்றும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்று தொண்டர்கள் விருப்பமனுக்களை பெற்றனர். அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் உள்பட பலரும் விருப்பமனுக்களை பெற்று, தாக்கல் செய்தனர். முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தார்.

இது தவிர கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் உதவியாளர்கள் மூலம் ரூ.11 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றனர். வரும் 6-ந்தேதி வரை அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஒரு சில நாட்களில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்து கட்சியின் தலைமை நேர்காணல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. நேர்காணலுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும். அதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிடவும், பிரசாரத்திற்கும் தயாராக உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவித்தது.

2016-01-25

மூலக்கதை