அன்புமணி ராமதாசின் நாம் விரும்பும் சென்னை: கருத்துக்கேட்பு பிரசாரம் நிறைவு

கதிரவன்  கதிரவன்
அன்புமணி ராமதாசின் நாம் விரும்பும் சென்னை: கருத்துக்கேட்பு பிரசாரம் நிறைவு

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ‘பசுமை தாயகம்’ அமைப்பு சார்பில், ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற தலைப்பில் ‘சென்னை நகரம் எப்படி இருக்க வேண்டும்?’ என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு பிரசாரத்தை கடந்த 22-ந்தேதி தொடங்கினார்.

24-ந்தேதி வரை(நேற்று) சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 22 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு பிரசாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, தனது 3 நாள் கருத்துக்கேட்பு பிரசாரத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று நிறைவு செய்தார். 23 இடங்களில் மக்களை சந்தித்து பேசினார்.

பிரசாரத்தின் கடைசிநாளான நேற்று ராயப்பேட்டை வி.எம்.தெரு, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், தரமணி பஸ்நிலையம், சோழிங்கநல்லூர் ஜங்சன், மேடவாக்கம், ஆலந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கருத்துக்களை கேட்டறிந்தார்.

மதியம் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் பொதுமக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-

தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த 2 திராவிட கட்சிகளால் எந்த முன்னேற்ற திட்டமும் இல்லை. மக்கள் வாழ்க்கை தரமும் உயரவில்லை. சினிமாவில் நடித்து, அடுக்குமொழியில் வசனம் பேசி மக்களுக்கு கல்வி அறிவு தராமல், சிந்திக்க விடாமல், முன்னேற விடாமல் வைத்துள்ளனர்.

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளம் வந்தது. 1976, 1986, 1996, 2005, 2015 ஆகிய ஆண்டுகளிலும் மழை வெள்ளம் வந்துள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இதற்கு தீர்வு காண நிரந்தர திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

நான் 50 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்குள்ள திட்டங்களை எல்லாம் சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு, மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அதற்கான திட்டங்கள் என்னிடம் இருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மாற்றம் தேவை. ஆட்சி மாற்றம் தேவை. அது யாரால் ஏற்படும் என்றால் மக்களால் தான்.

மக்களாகிய நீங்கள் மாற்றத்தை தாருங்கள், நான் உங்களுக்கு ஏற்றத்தை தருகிறேன். நான் 5 ஆண்டுகள் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்துள்ளேன். அப்போது 108 ஆம்புலன்சு திட்டம், பொது இடங்களில் புகைபிடிக்க தடை, குட்கா-பான் மசாலா விற்பனைக்கு தடை, ஐ.நா. பொதுசெயலாளர் பான் கீ முன் பாராட்டிய மிகப்பெரிய சுகாதார திட்டமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் நடத்திய கருத்துக்கணிப்பு பற்றி…

பதில்:- இது கருத்துக்கணிப்பு இல்லை. கருத்துத்திணிப்பு. இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

கேள்வி:- சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 ஆண்டு கால சாதனைகள் பற்றி பேசி உள்ளாரே?

பதில்:- ஜெயலலிதா பேசியது முழுவதும் பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

2016-01-25

மூலக்கதை