சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (19:26 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (19:26 IST)

சிக்கலூர் கோவில் விழாவில்

ஆடு, கோழிகளை பலியிட தடை 

சிக்கலூர் கோவில் விழாவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பி.ராமு கூறினார்.

சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் பி.ராமு நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   ‘’சிக்கலூர் சித்தபாஜி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த விழாவின்போது ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடு, கோழிகளை கொண்டு வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு போலீசார் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள்.

மேலும் இதை கண்காணிக்க ஒரு சிறப்பு படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த படையினர் கோவில் விழா முடியும் வரை அங்கேயே தங்குவார்கள். உதவி கலெக்டர் கவிதா ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் தலைமையில் அந்த படையினர் செயல்படுவார்கள்.

கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கடைகள் அமைக்க வேண்டும். கோவிலில் பாதுகாப்பு கருதி 10 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு 150 சிறப்பு பஸ்களை இயக்கும்படி அரசு போக்குவரத்து கழகத்துக்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப்குமார் ஜெயின் கூறும்போது, ‘சிக்கலூர் கோவில் விழாவில், ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோவில் விழாவின்போது ஏதாவது சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவது தெரியவந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.

 

மூலக்கதை