மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 24, ஜனவரி 2016 (12:27 IST)

மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2016 (12:27 IST)

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை 8.20 மணிக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 150 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறும் என்றும் தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர, அவசரமாக தரையிறக் கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர், அவர்களது உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு படையினர் விமானத்தில் சோதனையிட்டனர். அதில், சந்தேகத்துக்கு இடமாக எந்தவொரு பொருளும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல் புரளி என்பது பின்னரே தெரியவந்தது. யாரோ விஷமிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர். அது புரளி என்பதை அறிந்த பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதனிடையே, மும்பை விமானத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி பயன்படுத்திய தொலைபேசி எண்ணை ஆராய்ந்தபோது, அவர் புனே-சோலாப்பூர் சாலையில் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சஞ்சீவ் மிஸ்ரா (வயது 38) என்பதும், ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அனிமேஷன் துறையில் வல்லுனரான இவர், ஏற்கனவே மும்பை மற்றும் புவனேஸ்வர் விமான நிலையத்தில் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், போலீசாரை வேதனைப்படுத்துவதற்காக இந்த குறும்புதனத்தை கையாண்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மூலக்கதை