மோசடி கருத்து திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது: ராமதாஸ் அறிக்கை

கதிரவன்  கதிரவன்
மோசடி கருத்து திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் நேரத்தில் மிகச்சிறந்த வணிகமாக உருவெடுத்திருப்பது கருத்துக்கணிப்பு தான். அறையில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சிக்கு சாதகமான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு கோடிகளில் பணம் கிடைப்பதால், லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்தி வந்த பேராசிரியர் ராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இந்த கருத்துக் கணிப்பு 5 ஆயிரத்து 464 பேரிடம் மட்டும், அதாவது ஒரு தொகுதிக்கு 23 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. 10,000 பேருக்கு ஒருவர் வீதம் நடத்தப்படுவது கருத்துக் கணிப்பாக இருக்காது; திணிப்பாகவே இருக்கும். 2011 மற்றும் 2014 தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியை தூக்கி நிறுத்துவதும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் பா.ம.க.வின் வளர்ச்சியை மறைப்பதும் தான் இந்த கருத்துக்கணிப்பின் நோக்கம் ஆகும். மோசடியாக கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை மாற்ற முடியாது. வரும் தேர்தலில் பா.ம.க. பெரும் வெற்றி பெறப்போவது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2016-01-24

மூலக்கதை