அனுமதி பெறாமல் ரெயில் டிக்கெட் விற்பனை: தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

கதிரவன்  கதிரவன்
அனுமதி பெறாமல் ரெயில் டிக்கெட் விற்பனை: தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரெயில்வே நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், ரெயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்து வருவதாக, ஐ.ஆர்.சி.டி.சி.க்கு புகார்கள் வந்தது.

இந்த புகாரைத்தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி. தெற்கு ரெயில்வே ஊழல் கண்காணிப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், கண்காணிப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில்வேயிடம் உரிய அனுமதி பெறாமல் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் முறையான அனுமதி பெறாமல் ரூ.37 ஆயிரத்து 44-க்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுஷாந்த்குமார் லிங்கா (வயது 24), ஊழியர் சவுரங்கராய் (42) மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக ரெயில்வே ஊழியர் பிரேம்குமார் (40) ஆகிய 3 பேரையும் தெற்கு ரெயில்வே ஊழல் கண்காணிப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2016-01-23

மூலக்கதை