ஜெர்மனியல் சுமார் 500 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அகதிகள்: முறைப்பாடுகள் பதிவு

கதிரவன்  கதிரவன்
ஜெர்மனியல் சுமார் 500 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அகதிகள்: முறைப்பாடுகள் பதிவு

ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றபோது, அங்கு தங்கியுள்ள அகதி இளைஞர்கள், ஜெர்மனியப் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 516 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அங்குள்ள அகதிகளுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்த அகதிகள் பலர் ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் ஜெர்மனியில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவில் அந்நகர மக்கள் சாலை, தெருக்களில் கூடி வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 அகதிகள் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்ததாகவும் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்கானதாகவும் அவர்களிடம் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, இதுவரை 516 பேர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 100 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கொலோன் சம்பவத்தைக் கண்டித்து ஜெர்மனி முழுவதும் பொதுமக்கள் பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கலவரமும் வெடித்துள்ளது.

கொலோன் நகரில் நேற்று முன்தினம் சுமார் 20 ஜெர்மனிய இளைஞர்கள் ஒன்றுகூடி சிரியா, பாகிஸ்தானைச்
சேர்ந்த அகதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரத்தால் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டத்தை மீறும் அகதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ள ஸ்வீடன் நாட்டிலும் அண்மைக்காலமாக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் அகதிகள் மீதே குற்றம் சாட்டப்படுகின்றது.

2016-01-12

மூலக்கதை