தாரை தப்பட்டை - ஒரு பார்வை!

நக்கீரன்  நக்கீரன்
தாரை தப்பட்டை  ஒரு பார்வை!

தாரை தப்பட்டை - ஒரு பார்வை!

ரு நடனக்குழுவை நடத்திவருபவர் சன்னாசி. எம்.ஜி.ஆர் கையாலேயே கலைமாமணி வாங்கிய சாமிப் புலவரின் மகன் தான் சன்னாசி. இசைக் கலையை உயிராகவே மதித்துவரும் சாமிபுலவர், தன் மனைவி இறப்பில் பிறந்த சன்னாசிக்கு தனக்கு தெரிந்த கலைகளையெல்லாம் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். கால ஓட்டத்தில் மாறிப்போகும் சன்னாசி, அந்த கலையை கமெர்ஷியலாக மாற்றி ஆட்டக்காரிகளுடன் ஆடி, பாடி சம்பாதித்து அவர்களுக்கு தலைவனாக இருக்கிறார்.


’கூத்தாடிப் பயலுகளா’ என சன்னாசி குழுவை திட்டும் சாமிப் புலவர், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் எப்போதும் குடித்துக்கொண்டிருக்கிறார். சாமிப் புலவர் சரக்கடிக்க கம்பெனி கொடுப்பவர் ஆட்டக் குழுவின் மெயின் ஆட்டக்காரி சூறாவளி. ஒவ்வொரு ஆட்டக்காரிக்கும் மின்னல், அணுகுண்டு என தனிப்பெயர் வைத்து தமிழகத்தின் தெற்குப் பக்கத்தில் சிறந்த ஆட்டக்குழுவாக இருக்கிறது சன்னாசி குழு. சன்னாசியின் மாமன் மகளான சூறாவளிக்கு, சன்னாசி என்றால் கொள்ள பிரியம். ஆனால் சூறாவளியின் கவுச்சியான பேச்சாலும், துடுக்கான நடவடிக்கையாலும் அவளை வெறுக்கிறார் சன்னாசி. இவர்கள் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைகிறது, அந்தமான் கோவில் விழாவுக்கு அழைப்பு.

அந்தமான் கோவிலில் சன்னாசி வாசிக்க, சூறாவளி ஆட என படு ஜோராக நடந்து முடிகிறது திருவிழா. ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்துவரும் ‘ஆட்டம் முடிந்ததும் ஆட்டக்காரியை கட்டிலுக்கு அழைக்கும் சம்பவம்’ இங்கும் நடைபெறுகிறது. ஆட்டக்காரின்னாலே அவுசாரின்னு நினைக்கிறீங்களேடா என சன்னாசி வசனம் பேச, அவரை கை ஓங்கும் விழா கமிட்டிகாரர்களை சுழட்டி சுழட்டி அடிக்கிறார் சூறாவளி. அவமானத்தால் நடனக்குழுவினரை ஹோட்டலை விட்டு வெளியே தள்ளி, ரிட்டர்ன் டிக்கெட்டையும் கிழித்துபோடுகிறார்கள். ஊருக்கு திரும்ப தேவையான பணத்துக்காக அனைவரும் கூலித்தொழில்களெல்லாம் செய்கின்றனர். மாமன் பசியால் வாடுவதை காணமுடியாமல் ஆணி குத்தி காயப்பட்டிருந்த காலுடன் தார் சாலை அதிர பேருக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆட்டம் போடுகிறார் சூறாவளி. ‘என் மாமனுக்கு ஒண்ணுன்னா நான் அம்மனமா கூட ஆடுவேன்’ என்ற சூறாவளியின் வசனத்தில் சன்னாசியுடன் நாமும் நெகிழ்ந்து தான் போகிறோம்.


ஆட்டத்திற்கு புக் செய்ய வருபவர்களெல்லாம் சூறாவளியையே கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் வருகிறார் லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் ட்ரைவர் என அறிமுகமாகும் லோகநாதனையும் சன்னாசி வெளுத்துவாங்க, உண்மையாகவே சூறாவளியை திருமணம் செய்துகொள்ள கேட்பதாக லோகநாதன் சூறாவளியின் அம்மாவிடம் போய் நிற்கிறார். கவர்ன்மெண்ட் சம்பளம், அசிங்கமா ரோட்ல ஆடத் தேவையில்லை என சன்னாசியிடம் வந்து முறையிடும் சூறாவளியின் தாய்க்கு சன்னாசி வாக்கு கொடுத்து அனுப்புகிறார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சன்னாசி முதல் முறையாக குடித்துவிட்டு சூறாவளியை அடித்து உதைத்து லோகநாதனை கட்டிக்க சொல்லி துன்புறுத்த, ’என் சாமி நீயே சொல்லிட்ட’ என்று லோகநாதனை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறார் சூறாவளி.


குழுவிலிருந்து சூறாவளி சென்றதும், எந்த அட்டமும் புக் ஆகாமல் சிறு காற்று கூட இல்லாமல் கஷ்டப்படுகிறது குழு. இந்த சமயத்தில் அப்பா சாமிப்புலவருடன் நடக்கும் சண்டையில் ‘நீ பெரிய இசைப் புலவனா இருந்து என்ன பிரயோஜனம். கூத்தாடி காசுல தான உக்காந்து குடிக்கிற’ என சன்னாசி பொரிந்து தள்ள துடித்துப் போகிறது அந்த கலைஞனின் மனசு. அடுத்த நாளே ஒரு கச்சேரியில் பாடி பலரது பாராட்டையும் பெற்று, காசு வாங்காமல் சரக்கு மட்டும் வாங்கிக்கொண்டு தான் ஜெயித்துவிட்டதாக மகனிடம் எக்காளமிடும் அந்த கலைஞனின் உயிர் ஒரு விக்கலுடன் அடங்கிவிடுகிறது. 

தந்தை சாவுக்கு கூட சூறாவளி வராததை அத்தையிடம் சொல்லி முறையிடும் போது தான், சூறாவளி எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாததும், கலெக்டரிடம் லோகநாதன் என்ற பெயரில் யாரும் வேலையே செய்யாததும் தெரியவருகிறது சன்னியாசிக்கு. இந்த காட்சிக்கு பிறகு தான் பாலா விஸ்வரூபம் எடுக்கிறார். கஞ்சா அடிப்பவன், விபச்சாரம் செய்பவன், கரு முட்டைகளை விற்பவன் என வில்லனுக்கு ஒரு புது அவதாரம் கொடுத்து அதிர வைக்கிறார். சூறாவளிக்கு என்ன நேர்ந்தது என்பது பாலா படங்களுக்கே உரிய க்ளைமேக்ஸ்.


தாரை தப்பட்டையில் இளையராஜாவின் பங்கு என்பது மலையளவு. ஒவ்வொரு பாடலிலும் சரி பிண்ணனி இசையிலும் சரி சூறாவளியாக மனிதன் அடித்து நொருக்கியிருக்கிறார். ஆயிரமாவது படத்தில் இப்படி ஒரு இசையைக் கொடுத்து அவரது ரசிகர்களுக்கு நல்ல பரிசைக் கொடுத்துவிட்டார்.

சூறாவளியாக வரலெட்சுமி அப்படியே பொருந்திவிட்டார். சிறப்பாக நடித்திருக்கிறார் என எந்த காட்சியையும் குறிப்பிட முடியாது. எல்லா காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். மூன்று பாடல்களிலும் இவர் ஆடும் ஆட்டத்திற்கு திரையரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமையை சசிகுமாரிடம் சொல்லி அழும் காட்சிகளிலெல்லாம் கலங்கவைக்கிறார். அதே மாதிரி மூன்று சண்டை காட்சிகளுலும் பட்டய கெளப்பிவிட்டார்.


அடுத்து மிரட்டியிருப்பவர் ஆர்.கே.சுரேஷ். டைட்டில் கார்டில் ’அறிமுகம்’ என்ற அறிவிப்பு இல்லையென்றால் இவர் அறிமுக நடிகர் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு மிரட்டல். கருப்பு நிறம், வாகான உடல், அதிகாரக் குரல் என வில்லத்தனம் முழுக்க நிரம்பியிருக்கிறது. வழக்கம்போலவே பாலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தவிர்க்கமுடியாத ஒரு வில்லன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

எப்போதுமே தன்னை விமர்சன வளையத்திற்குள் பாதுகாப்பை நிறுத்திக்கொள்பவர் பாலா. இந்த படத்திலும் அந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஒரு பெண் எப்போதும் சரக்கு பாட்டிலும் கையுமாக இருப்பதாக ஒரு கேரக்டரை வைக்க பாலாவைத் தவிர வேறு ஆள் இல்லை. வில்லனைப் பார்த்தால் கோபம் வரவேண்டும். ஆனால் பாலாவின் வில்லனைப் பார்த்தால் அருவறுப்புத் தான் வருகிறது. எதார்த்த ஹீரோக்களின் பட்டியலில் பாலா பட நடிகர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஆனால் அத்தனை அடி, உதை வாங்கிவிட்ட பிறகும் எழுந்துவந்து சண்டையிடும் ஹீரோ பாலா படத்திற்கு சற்றும் பொருந்தவில்லை.


ராஜாவின் இசை, வரலட்சுமியின் ஆட்டம், சசிகுமாரின் தியாகம், வில்லனின் மிரட்டல் காமெடி என படத்தில் ரசிக்க நிறையவே இருக்கிறது. பெண்களின் கருமுட்டை திருட்டு பற்றி இன்னும் விளக்கமான காட்சிகள் இருந்திருந்தால், பாலா சொல்ல வந்ததை புரிந்துகொண்டிருக்கலாம். முதல் பாதியில் எந்த அளவிற்கு மகிழவைக்கிறாரோ அதே அளவிற்கு, இரண்டாம் பாதியில் காட்சிகளாலும் வசனங்களாலும் படம் பார்ப்பவர்களை அதிர வைக்கிறார்!

தாரை தப்பட்டை - அதிர வைக்கிறது!

மூலக்கதை