மக்களை இன- மத ரீதியில் பிளவுபடுத்தும் அரசியலை அனுமதிக்கக் கூடாது: பராக் ஒபாமா

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மக்களை இன மத ரீதியில் பிளவுபடுத்தும் அரசியலை அனுமதிக்கக் கூடாது: பராக் ஒபாமா

Thursday, 14 January 2016 04:46

அமெரிக்க மக்களை இன- மத ரீதியிலான பிளவுபடுத்தும் அரசியல் முனைப்புக்கள் கைவிடப்பட வேண்டும். அவை, அனுமதிக்கப்படக் கூடாது என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

வருடாந்திர பாராளுமன்ற உரையை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செனற் மற்றும் காங்கிரஸ் அவைகள் ஒன்றினைந்த பாராளுமன்ற அமர்வில் அமெரிக்க ஜனாதிபதிகள் வருடாந்தம் உரையாற்றுவது வழமை. அதன்பிரகாரம், தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதி உரையை பராக் ஓபாமா ஆற்றியுள்ளார். அவர் இந்த ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய உரையில் அவர் குறிப்பிட்டள்ளதாவது, “மக்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ பிளவுபடுத்தும் அரசியலை அனுமதிக்கக் கூடாது. நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் சூழலால் பெரும்பாலான அமெரிக்கர்கள் அச்சமடைந்துள்ளது உண்மையே. அந்த அச்சத்தை குடியரசுக் கட்சியினர் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உலகம் நம்மை மதிப்பதற்குக் காரணம், அனைத்து இன, மதங்களையும் மதிக்கும் நமது பண்பாடுதானே தவிர, நம்மிடம் உள்ள ஆயுதங்கள் அதற்குக் காரணமில்லை. இங்குள்ள சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களை இழிவு படுத்திப் பேசுவதானாலோ, மசூதிகளை அவமதிப்பதாலோ, முஸ்லிம் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாலோ அமெரிக்காவுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. அது உலகின் பார்வையில் அமெரிக்காவின் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் செயல்கள்.” என்றுள்ளார்.

மூலக்கதை