மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 4 இலட்சம் ரூபா? – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

கதிரவன்  கதிரவன்
மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 4 இலட்சம் ரூபா? – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் மாத சம்பளமாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மாத சம்பளமாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெற்று வருவது பற்றி வெளியான செய்தியின் அடிப்படையில் மும்பை நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தானாக வழக்கை நடத்தியுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு நாக்பூர் கிளை சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்த்து இந்திய உணவு கழக தொழிலாளர் சங்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், இந்திய உணவு கழகத்தில் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு ஊக்கத்தொகை இருப்பதாக தொழிலாளர்கள் சங்கத்தினர் வாதிட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஏற்காத நீதிபதிகள், இந்திய உணவுக்கழகத்தில் ஊழல் நடப்பதையே இது காட்டுகிறது. மூட்டைத்தூக்கும் தொழிலாளி எப்படி மாதம் 4 இலட்சம் ரூபா சம்பாதிக்க முடியும்? இந்நாட்டில் அதிகம் சம்பளம் பெறுவது ஜனாதிபதி தான். ஆனால் அவரை விட அதிகமாக 370 தொழிலாளர்கள் மாதம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுவது எப்படி சாத்தியம்?

அவர்கள் தொழிலாளர்களா அல்லது ஒப்பந்தக்காரர்களா? இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு சுமார் 18,000 கோடி ரூபா இழப்பு ஏற்படுகிறது. இந்த விடயத்தில் நடக்கும் தவறை கண்டுபிடித்து மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இதுகுறித்து பத்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையெனில் இது தொடர்பாக நாங்களே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

2016-01-10

மூலக்கதை