நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜெயசுந்தரவின் ஆட்டமிழப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜெயசுந்தரவின் ஆட்டமிழப்பு

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 55 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இனிங்சை ஆரம்பித்தது. தொடக்க வீரர்கள் 71 ஓட்டங்களைக் குவித்தனர்.

முதல் விக்கெட்டாக கருணாரத்ன 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெயசுந்தர ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 23 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4 ஆவது பந்தில் கருணாரத்ன ஆட்டமிழக்க அடுத்து ஜெயசுந்தர களமிறங்கினார்.

இந்த ஓவரின் கடைசி பந்தை லெக் திசையில் வீசினார். இதை ஜெயசுந்தர கிளான்ஸ் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது கையுறையை (Glove) உரசிச் சென்றதுபோல் சென்று காப்பாளரிடம் சென்றது. இதற்கு நியூசிலாந்து வீரர்கள் பிடியெடுப்பிற்கான கோரிக்கையை விடுத்தனர். ஆனால், மைதான நடுவர் போல் ரிபெல் ஆட்டமிழப்பில்லை என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் மீள் பரிசீலனை மூலம் 3 ஆவது நடுவரிடம் முறையிட்டனர். அப்போது ஸ்னிக்கோ மீட்டர் மற்றும் ஹொட்ஸ்பொட் முறையில் பார்த்த போது பந்து கையுறையில் பட்டு சென்றதாக தெரியவில்லை.

அதைபோல் பின்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது பந்திற்கும் கையுறைக்கு இடையில் இடைவெளி இருந்தது போன்று தெரிந்தது. ஆனால், 3 ஆவது நடுவர் ரிச்சார்ட் கெட்டில்பொரோவ் டிஆர்எஸ் முறையில் ஆட்டமிழப்பு என அறிவித்தார்.

இதனால் அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 133 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்த விக்கெட் இலங்கை அணியின் வெற்றியை பறிக்கும் அளவிற்கு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.

நியூசிலாந்து அணிக்கு 189 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்து வெற்றியிலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து அணி கடந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனும் அடிப்படையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. போட்டயின் நாயகனாக வில்லியம்சன் தேர்வானார்.

மூலக்கதை