எங்களால் நிம்மதியா வாழ முடியலை… தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் – உஷா ராஜேந்தர் (Video)

கதிரவன்  கதிரவன்
எங்களால் நிம்மதியா வாழ முடியலை… தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் – உஷா ராஜேந்தர் (Video)

சென்னை: பீப் பாடல் திருடப்பட்ட பாடல், அதனை வெளியிட்டு என் மகன் சிம்பு கலைத்துறையில் வளரக்கூடாது என்று பொறாமையில் செயல்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இனியும் தொந்தரவு கொடுத்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதைத்த தவிர வேறு வழியில்லை என்று சிம்புவின் தயாரும் டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷா கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்தும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிம்பு தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் ஏராளமான கேமராக்கள் சிம்புவின் வீட்டு முன்பு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தனது மகனின் ‘பீப்’ பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த சினிமாவில் நாங்கள் கஷ்டப்பட்டு ஜெயித்திருக்கிறோம். என் மகன் வளரக்கூடாது என்று பலரும் நினைக்கின்றனர். 6 மாத குழந்தையாக இருக்கும் போதிருந்தே நடித்துக்கொண்டிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து பாடிய பாடலை பீப் போட்டு மூடி வைத்திருக்கின்றனர். இதனை வேண்டாதவர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் பெண்களின் மனதை புண்படுத்தியிருந்தால் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் இதை கண்டுபிடிக்கச் சொல்லி புகார் கொடுத்தோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் சிம்புவின் மீது வழக்கு பதிவு செய்து விரட்டுகின்றனர்.

“சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணிவிட்டார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் ‘பீப்’ போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு போலீஸ் இருக்கிறது.

24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். போலீஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியா விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.

என் மகன் சினிமாவில் வளரக்கூடாது… அவன் படம் ரிலீஸ் ஆகக்கூடாது என்று சினிமா துறையில் இருப்பவர்களே செயல்படுகின்றனர். என் மகனின் படங்கள் வெளியாவதை தடுக்கின்றனர். ஆரோக்கியமான போட்டி வேண்டும்தான் அதற்காக இப்படி கெட்ட பெயர் ஏற்படுத்துவது ஏன் என்றுதான் தெரியவில்லை.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், ‘பீப்’ சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அதை வெளியிட்டு இப்படி தொந்தரவு கொடுக்கின்றனர்.

நாட்டில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு ஏன் சிம்புவை இப்படி தொந்தரவு செய்கின்றனர் என்று தெரியவில்லை. சிம்புவை போலீஸ் தேடினால் அவர் போலீசில் சரணடைந்து விடுவார். அதற்காக மீடியாக்கள் ஏன் இப்படி எங்கள் வீட்டு முன்பு காத்திருக்க வேண்டும்? எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது.

அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்.

நான் வருகிறேன். வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்தொரு நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே இருக்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.

என் கணவர் மூன்று முதல்வரை எதிர்த்து நின்றிருக்கிறார் அரசியல் ரீதியாக எத்தனையோ கஷ்டங்களை தாங்கி நின்றிருக்கிறோம். ஒன்றுமில்லாத பிரச்சினைக்கு இப்படி ஏன் தொந்தரவு கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை.

சிம்பு ஒரு சாதாரண நடிகன். பத்து நடிகரோடு அவரும் ஒரு நடிகர். இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது. தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்.

2015-12-24

மூலக்கதை