இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 122 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி

கதிரவன்  கதிரவன்
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 122 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக மார்டின் குப்தில் 156 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 88 ஓட்டங்களையும் மெக்குலம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக பிரதீப் 4 விக்கெட்டுகளையும் லக்மல் மற்றும் சாமிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்று 134 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கருணாரத்ன 84 ஓட்டங்களையும் சந்திமல் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் சௌத்தி மற்றும் வோக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 134 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதையடுத்த நியூசிலாந்து அணியால் இலங்கை அணிக்கு 404 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

404 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப்பெற்று 122 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் சௌத்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலங்கை அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக குப்தில் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி ஹமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.

2015-12-14

மூலக்கதை