நியூசிலாந்து – இலங்கை 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

கதிரவன்  கதிரவன்
நியூசிலாந்து – இலங்கை 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டுனெடினில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்குகிறது. இந்த ஆடுகளத்திலும் புற்கள் தாறுமாறாக இருப்பதால், முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் நியூசிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்க இருக்கிறது.

அந்த அணியின் முன்னணி வீரர் கனே வில்லியம்சன் விரலில் காயத்தால் அவதிப்படுகிறார். ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் இந்த டெஸ்டில் களம் இறங்க இருக்கிறார். நியூசிலாந்து அணி உள்ளூரில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது கடைசி 12 டெஸ்டில் தோற்றதில்லை. இந்த டெஸ்டிலும் தோல்வியை சந்திக்காமல் இருந்தால், 1987-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரையிலான முந்தைய இச்சாதனையை (உள்ளூரில் 13 டெஸ்டில் தோல்வியில்லை) சமன் செய்யும். கனே வில்லியம்சன் கூறும் போது,

‘கடந்த டெஸ்டில் ஆடிய வீரர்களுடனேயே இந்த போட்டியிலும் விளையாட உள்ளோம். ஆடுகளத்தை பார்க்கும் போது, கூடுதலாக வேகப்பந்து வீச்சாளருடன் இறங்குவதே சரியாக இருக்கும். டுனெடின் ஆடுகளத்திலும் புற்கள் இருந்தது. ஆனால் அதை விட ஹாமில்டன் ஆடுகளம் இன்னும் அதிகமாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க வாய்ப்புள்ளது. ‘ஸ்விங்’ முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.’ என்றார்.

மேலும் அவர், ‘எனது விரலில் எலும்பு முறிவு கூட இருக்கலாம். ஆனால் இன்னும் அதை பரிசோதிக்கவில்லை’ என்றார். அனுபவம் இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் ஒரு பலத்த சவால் காத்திருக்கிறது. கடைசியாக இங்கு நடந்த 3 டெஸ்டுகள் 5-வது நாளுக்கு சென்றதில்லை. இந்த டெஸ்டும் அவ்வாறு முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், ‘ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருக்கிறது.

இதனால் டாஸ் ஜெயித்தால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வோம். அவ்வாறு பவுலிங் செய்தால் கடந்த டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்போம். எங்களுக்கு டெஸ்டில் வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இது போன்ற ஆடுகளத்தில் தான் விளையாட வேண்டும். ஏனெனில் இது பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது’ என்றார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டாம் லாதம், கனே வில்லியம்சன், ராஸ் டெய்லர், பிரன்டன் மெக்கல்லம் (கேப்டன்), மிட்செல் சான்ட்னெர், வாட்லிங், பிரேஸ்வெல், டிம் சவுதி, நீல் வாக்னர், டிரென்ட் பவுல்ட்

இலங்கை: கருணாரத்னே, குசல் மென்டிஸ், ஜெயசுந்தரா, சன்டிமால், மேத்யூஸ் (கேப்டன்), விதானாகே, மிலிண்டா ஸ்ரீவர்த்தனா, ஹெராத், சமீரா, லக்மல், நுவான் பிரதீப்.

2015-12-18

மூலக்கதை