சூரியனை சுற்றி வரும் கோள்கள்!
பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதன் கண்களுக்கு எட்டிய வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சூரியனையும், அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உள்பட சிறிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
கோள்களை கிரகங்கள் என்றும் சூரியனை விண்மீன், நெருப்புக்கோளம் என்றும் அழைக்கின்றனர். சூரியன் அதிக வெப்பம் உமிழக்கூடியது என்றாலும் அதன் துணையின்றி உலகில் உயிரினங்கள் வாழ முடியாது. கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் சூரியனை மிகப் பெரிய வெப்பப்பந்து என்று தான் குறிப்பிடவேண்டும். சூரியனை சுற்றி வரும் கோள்களை பற்றி பார்ப்போம்..!
புதன்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன். இதுவே சூரிய குடும்பத்தில் முதல் கோளாகும். மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே விரைவாக சுற்றி வருகிறது. இதற்கு துணைக் கோள்கள் கிடையாது. 88 நாட்களுக்குள்ளாக சூரியனை சுற்றி வந்து விடுகிறது.
வெள்ளி
அதிக அளவில் ஒளிரும் வெள்ளிக்கோளை பூமியிலிருந்து அதிகாலையில் பார்க்க முடியும். இது சூரியனை கிழக்கு மேற்காகச் சுற்றி வருகிறது. இதுவே சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோள். சூரியனிடமிருந்து 10 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சுற்றி வருகிறது.
பூமி
மனிதர்களின் இருப்பிடமாக திகழும் பூமிதான் மூன்றாவது கோள். சூரிய குடும்பத்தில் காற்று, நீர் போன்றவை சூழப்பட்டு உயிரினங்கள் வசிக்கக்கூடிய கோளாக பூமி மட்டுமே கருதப்படுகிறது. திடமான கோளாக திகழும் பூமியைச் சுற்றி காற்று மண்டலம் உள்ளது. அதில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் நிறைந்து இருப்பதால் புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே தான் பூமி ஒரு உயிர்கோள் என புகழப்படுகிறது. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியை மையமாக கொண்டு சந்திரன் துணைக் கோளாக சுழல்கிறது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர பூமி 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
செவ்வாய்
சூரியக் குடும்பத்தின் நான்காவது கோள் செவ்வாய். பூமி மற்றும் வெள்ளி ஆகிய இரண்டினைக் காட்டிலும் மிகச்சிறிய கிரகமாக உள்ளது. சிவப்பு நிறமுடையதால் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. பூமியின் அளவில் பாதியாக இருக்கும் இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.
செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள் உண்டு. இதில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என உலக நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது சூரியனைச் சுற்றி வர 687 நாட்கள்ஆகிறது.
வியாழன்
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் ஐந்தாவது இடத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இக்கோளில் பெரிய சிவப்பு வட்டம் உள்ளது. இதனை பெரிய வாயுக் கோள் எனவும் அழைக்கின்றனர். இது சூரியனை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வலம் வருகிறது. 63 துணைக்கோள்கள் உடைய இக்கோள் சூரியனை சுற்றி வர சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.
சனி
ஆறாவது இடத்தில் உள்ள இந்த சனிக் கோளைச் சுற்றி பெரிய வளையங்கள் உள்ளன. நுண்கற்கள், தூசு, பனி போன்றவற்றை கொண்ட தொகுதிதான் வளையம் போலத் தோற்றமளிக்கிறது. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் சுழலும் சனிக் கோளுக்கு 60 துணைக் கோள்கள் உள்ளன. சனிக் கோள் சூரியனை சுற்றி வர சுமார் 29 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.
யுரேனஸ்
சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை சுற்றி வாயுக்களால் ஆன வளையங்கள் காணப்படுகின்றன. இது குளிர்ச்சியான கோள். இதற்கு 27 துணைக் கோள்கள் உள்ளன. இதில் டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் மற்றும் மிராண்டா ஆகிய கோள்கள் மிகப்பெரிய கோள்களாகும். இது சூரியனை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றன.
நெப்டியூன்
எட்டாவது கோள் தான் நெப்டியூன். இக்கோளைச் சுற்றியும் வாயு வளையங்கள் உள்ளன. இது மேற்கில் இருந்து கிழக்காக சூரியனை தன்னைத்தானே சுற்றிவரும். இதற்கு 13 துணைக் கோள்கள். மேகங்கள் சூழ்ந்து நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இக்கோள் சூரியனைச் சுற்றிவர சுமார் 160 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.
புளூட்டோ
ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவில், கோளுக்குரிய பண்புகள் இல்லாததால் குறுங்கோள் என புதிதாக வகைப்படுத்தி உள்ளனர். 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, சிறுசிறு கற்கள், பெரும்பாறைகள், வன்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு உருவானதாக கருதப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல குறுங்கோள்களும் உள்ளன. அவற்றை அணுசக்தி துறையின் தந்தை விக்ரம் சாராபாய், கணித மேதை ராமானுஜம் ஆகியோரின் பெயரில் குறிப்பிடுகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
