இங்கிலாந்தில் பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் மரணம்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இங்கிலாந்தில் பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் மரணம்

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3-வது டிவிசன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இந்திய வம்சாவளி வீரரான பாவலன் பத்மநாதன் பேட் செய்து கொண்டிருந்த போது எதிரணி பவுலர் வீசிய பந்து நெஞ்சில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த பாவலன் முதலில் நான் நன்றாக இருக்கிறேன் என்று கையால் சைகை காட்டினார். ஆனால் சில அடி தூரம் நடந்த அவர் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி 24 வயதான பாவலன் உயிர் பிரிந்தது. இந்த துயர சம்பவத்துக்கு அவர் விளையாடிய கிளப் உள்பட பல்வேறு கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சர் பந்து கழுத்தில் தாக்கியதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் பரிதாபமாக பலியானார். உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியை மறக்கும் முன்பே கடந்த ஏப்ரல் மாதத்தில் பெங்கால் அணியின் பேட்ஸ்மேன் அக்கித் கேஷ்ரி பீல்டிங் செய்கையில் சக வீரருடன் கவனக்குறைவாக மோதியதில் தலையில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கிரிக்கெட் உலகில் இது போன்று அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் கிரிக்கெட் விளையாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மூலக்கதை