ஆறாவது விம்பிள்டன் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஆறாவது விம்பிள்டன் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தனது எட்டாவது விம்பிள்டன் இறுதியாட்டத்தில் விளையாடிய செரீனா, ஸ்பெயினின் கார்பீன் முகுரூஸாவை 6-4, 6-4 என்று நேர் செட்களில் வீழ்த்தினார்.

இது செரீனா வில்லியம்ஸ் பெறுகின்ற 21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.

33 வயதான நிலையில் செரீனா இப்பட்டம் வென்றிருப்பதால் மிக அதிகமான வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் அவரைச் சேர்ந்துள்ளது.

இதற்கு முன் இந்த சாதனை மார்ட்டினா நவரத்திலோவா வசம் இருந்தது.

மேலும் சென்ற ஆண்டின் யூ எஸ் ஓபன் தொடங்கி இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனை வென்றிருப்பதன் மூலம் நான்கு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் அடுத்தடுத்து வரிசையாக வென்றவர் என்ற பெருமையை இரண்டாவது முறையாக செரீனா பெற்றுள்ளார்.

செரீனா மட்டுமே இந்த சாதனையை இரண்டு முறை செய்துள்ளதால் இந்த சாதனைக்கே செரீனா ஸ்லாம் என பெயரிட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஓபன் எரா எனப்படும் முழுமையாக சர்வதேச மயமான போட்டிகள் ஆரம்பித்த பின்னர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற சாதனை 22 கிராண்ட் ஸ்லாம்களை வென்ற ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப் வசம் தற்போது உள்ளது.

இன்னும் ஒரு ஸ்லாம் வென்றால் அந்த சாதனையை செரீனா சமன் செய்வார்.

ஆனால் அவர் விளையாடுகின்ற விதத்தைப் பார்த்தால், ஸ்டெஃபீயின் சாதனையை செரீனா முறியடிப்பார் என்றே பலரும் கருதுகின்றனர்.

மூலக்கதை