கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்

  தினத்தந்தி
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகா ரங்கப்பனதொட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. இதனால் கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பாழடைந்த கிணற்றின் அருகே 2 யானைகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை விரட்டியடித்த கிராம மக்கள், கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது அந்த கிணற்றுக்குள் குட்டி யானை ஒன்று பரிதவித்தப்படி கிடந்தது. இதுபற்றி உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காலை 7 மணிக்கு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனை தூரத்தில் நின்று தாய் யானை பார்த்துக் கொண்டிருந்தது. இதையடுத்து வனத்துறையினர் மீட்கப்பட்ட குட்டி யானையை அதன் தாயிடம் சேர்த்தனர்.

மூலக்கதை