ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

  தினத்தந்தி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னி,ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.119 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. வெற்றி இலக்கை விரைவில் எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக ரன்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மூலக்கதை