நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிராக ஆபாச கருத்து பதிவிட்ட ஆடிட்டர் கைது

  தினத்தந்தி
நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிராக ஆபாச கருத்து பதிவிட்ட ஆடிட்டர் கைது

பெங்களூரு,கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்துகளை சிலர் பதிவிட்டு இருந்தனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும் 18 இன்ஸ்டாகிராம் கணக்குதாரர்கள் பற்றிய தகவல்களையும் அவர் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் தான் புகார் அளித்தும் ஆபாச பதிவு வெளியிட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று விஜயலட்சுமி குற்றச்சாட்டு கூறி இருந்தார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிதின் மற்றும் சந்துரு ஆகிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், விஜயலட்சுமிக்கு எதிராக ஆபாச பதிவுகளை வெளியிட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் உப்பள்ளியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் நாகராஜ் குல்லப்பா, தார்வாரை சேர்ந்த ஆடிட்டரான பிரசாந்த் தலவாரா என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் ஆபாச கருத்துகளை பதிவிட்டதை ஒப்புக் கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மூலக்கதை