காங்கிரசுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும்: சசி தரூர் எம்.பி.

  தினத்தந்தி
காங்கிரசுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும்: சசி தரூர் எம்.பி.

வயநாடு,கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் கலந்துகொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகளை கட்சிக்கு உள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் நிலவ வேண்டும். தலைவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கும். அது இயல்பானது. அதனை வெளியில் கூறாமல் கட்சிக்குள் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். ஆனால், பொது மேடைகளில் நாம் ஒன்றாக இணைந்து நின்று கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்கும் போது, கருத்து முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதனை சாதுரியமாக கையாள வேண்டும். இந்த விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல், கட்சி பிளவுபடாமல் காத்து ஒற்றுமையுடன் நின்று நமது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் முன்கூட்டியே வேட்பாளர்களை நிர்ணயம் செய்து, பிரசாரம் தொடங்கி கட்சியின் வெற்றிக்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை