கர்நாடகா: புதிய சாதனை படைக்க உள்ள முதல்-மந்திரி சித்தராமையா

  தினத்தந்தி
கர்நாடகா: புதிய சாதனை படைக்க உள்ள முதல்மந்திரி சித்தராமையா

மைசூரு, கர்நாடக முதல்-மந்திரியாக நீண்ட காலம் பதவி வகித்தவராக மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் உர்ஸ் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது கர்நாடக முதல்-மந்திரியாக உள்ள சித்தராமையா, வருகிற 7-ந்தேதியன்று இந்த சாதனையை முறியடிக்க உள்ளார். இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மக்கள் அளித்த ஆசீர்வாதமே இதற்கு காரணம். அதனாலேயே இது சாத்தியப்பட்டு உள்ளது. ஒரு தாலுகா வாரிய உறுப்பினரான பிறகு, என்னுடைய அரசியல் வாழ்க்கையில் மந்திரியாகவும், முதல்-மந்திரியாகவும் வருவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. 13 தேர்தல்களில் போட்டியிட்டு, அவற்றில் 8 முறைக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறேன். சிறு மக்கள் தொகையை கொண்ட உர்ஸ் சமூகத்தின் பிரபலம் வாய்ந்த ஒரு தலைவராக இருந்தவர் தேவராஜா உர்ஸ். அப்படி சிறப்பு பெற்ற தலைவருக்கும், எனக்கும் இடையே ஒப்பீடு என்பதே கிடையாது. அவருடைய ஆட்சி காலத்தில் நிலைமை வேறுபட்டு இருந்தது. அவர் ஒரு தேர்தலில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார். அவர் தொடர்ந்து பேசும்போது, சாதனைகள் என்பது முறியடிக்கப்பட வேண்டியவை. நான் தற்போது நிறைவு செய்யும் பதவி காலத்திற்கும் கூடுதலாக பதவி வகிக்கும் மற்றொரு தலைவர் வரக்கூடும். என்னை விட அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்ய கூடிய ஒரு தலைவரும் வரலாம் என்றார். பட்ஜெட் தயாரிப்பு பணி பொங்கலுக்கு பின்னர் தொடங்கப்படும் என்றும் அப்போது கூறினார்.

மூலக்கதை