பீகார் தேர்தல்; 20 ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையிலான வெற்றியை என்.டி.ஏ. பெறும்: பிரதமர் மோடி

  தினத்தந்தி
பீகார் தேர்தல்; 20 ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையிலான வெற்றியை என்.டி.ஏ. பெறும்: பிரதமர் மோடி

புதுடெல்லி, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நமோ செயலி வழியே பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) பெண் தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர், தேர்தலை நான் உற்றுநோக்கி வருகிறேன். என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறும். அது பெரிய அளவில் இருக்கும் என்றார். வெற்றியை பற்றி எனக்கு கேள்விகளே இல்லை. ஆனால், அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். மக்களிடையே தேசிய ஜனநாயக கூட்டணி மீது பெரிய ஆர்வம் ஏற்பட்டு உள்ளது என பெண் தொண்டர் ஒருவர் பிரதமர் மோடியுடன் உரையாடும்போது கூறினார். அதற்கு பிரதமர் மோடி, ஏழைகள், தலித்துகள், மகா தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் இடையே காணப்பட கூடிய உணர்வை அவருடைய வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன என கூறினார். கடந்த 20 ஆண்டுகளில் என்.டி.ஏ. பெற்ற வெற்றியை முறியடிக்கும் வகையிலான சாதனையை படைப்பதற்கான மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். பீகாரில், காட்டாட்சி மக்கள் படுதோல்வியை சந்திப்பார்கள் என்று பேசியுள்ளார். அவர் மகாகத்பந்தன் கூட்டணியை காட்டாட்சி என குறிப்பிட்டு வருகிறார். பெண்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் பணியை மேம்படுத்துவதுடன், அவர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும் ஆக்குவதற்கு என்.டி.ஏ. கூட்டணி ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

மூலக்கதை