வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு செல்ல மாட்டார் - ஆகாஷ் சோப்ரா

  தினத்தந்தி
வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு செல்ல மாட்டார்  ஆகாஷ் சோப்ரா

புதுடெல்லி, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது. இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்ல மாட்டார் என்று தனக்கு தோன்றுவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு செல்வார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் என்னை பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்ல மாட்டார் என்று தோன்றுகிறது. ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே கூறியுள்ள கருத்தில் : குஜராத் அணியில் தனக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இங்குள்ள சூழ்நிலையும், அணியின் செட்டப்பும் மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது தற்போதைக்கு அவர் வேறொரு அணிக்காக செல்ல விரும்பவில்லை என்று தெரிகிறது. அதோடு வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி முழுநேர பந்துவீச்சாளராக பயன்படுத்தவில்லை என்றாலும் பேட்ஸ்மேனாக டாப் ஆர்டரில் களமிறக்கி விடும் அளவிற்கு அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் அவர்கள் வாஷிங்டன் சுந்தரை வெளியேற்ற விரும்ப மாட்டார்கள் என்று தனக்கு தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை