தங்கம் விலை 2-வது நாளாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?

  தினத்தந்தி
தங்கம் விலை 2வது நாளாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னை,தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.87,600 என்று இருந்த நிலையில், 6-ந்தேதி ரூ.89 ஆயிரத்தையும், 11-ந்தேதி ரூ.92 ஆயிரத்தையும், 16-ந்தேதி ரூ.95 ஆயிரத்தையும் கடந்தது. அதற்கு மறுநாளும் (17-ந்தேதி) விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து எகிறி ஆட்டம் காட்டி வந்த தங்கம் விலை, நேற்று அதிரடியாக குறைந்தது. எப்படி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சறுக்கலை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.300-ம், பவுனுக்கு ரூ.2,400-ம் சரிந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது. இந்த நிலையில், தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவை சந்தித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மூலக்கதை