ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது

  தினத்தந்தி
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவருகின்றன. நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தணிந்து, அமெரிக்கா நமது நாட்டின் மீது திணித்த வரியை திரும்ப பெற்றாலே தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தங்கம் விலை கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, நேற்று ரூ.95 ஆயிரத்தையும் எட்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை மீண்டும் பதிவு செய்து இருந்தது. இந்நிலையில் இன்றும் (வெள்ளிக் கிழமை) தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக கிடுகிடுவென எகிறி வந்த வெள்ளி விலை நேற்று சற்று குறைந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் வெள்ளிவிலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 17.10.2025 ஒரு சவரன் ரூ.97,600 (இன்று) 16.10.2025 ஒரு சவரன் ரூ.95,200 (நேற்று) 15.10.2025 ஒரு சவரன் ரூ.94,880 14.10.2025 ஒரு சவரன் ரூ.94,600 13.10.2025 ஒரு சவரன் ரூ.92,640 12.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

மூலக்கதை