டெஸ்ட் கிரிக்கெட்: சதம் விளாசியதை இந்திய ராணுவத்திற்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

  தினத்தந்தி
டெஸ்ட் கிரிக்கெட்: சதம் விளாசியதை இந்திய ராணுவத்திற்கு சமர்பித்த துருவ் ஜுரெல்

அகமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 38 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் கில் 18 ரன்னுடனும் பேட்டிங்கை தொடங்கினர். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் சுப்மன் கில், அரைசதம் அடித்த நிலையில், 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 100 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜடேஜா மற்றும் ஜுரெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் துருவ் ஜுரெல் 125 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். இறுதியில் 2ம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டை 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 104 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் சதம் அடித்த பின்னர் துருவ் ஜுரெல் அதை கொண்டாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் தனது சதத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிக்க்ம் விதமாக கொண்டாடியதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதை கொண்டாடியதை என்னுடைய அப்பாவுக்கும், சதம் விளாசியதை கொண்டாடியதை இந்திய ராணுவத்துக்கும் சமர்ப்பிக்கிறேன். போர்க்களத்தில் நமக்காகப் போராடும் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. அணியில் விளையாட இடம் கிடைக்காவிட்டாலும், தொடர்ச்சியாக கடினமாக உழைத்தேன். அதனால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசினேன். கடின உழைப்பின் மூலம் இந்த சதம் எனக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். துருவ் ஜுரெலின் தந்தை கார்கில் போரின்போது, இந்திய ராணுவத்தில் சேவையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை