அரசு பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி... பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சி,கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தது. அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தனர். தாங்கள் விஷம் குடித்திருப்பதாக 3 பேரும் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவ மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடனடியாக மாணவிகள் 3 பேரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாணவிகளும் எதற்காக விஷம் குடித்தனர் என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் யாராவது திட்டியதில் மனம் உடைந்து அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா? அல்லது எதற்காக விஷம் குடித்தனர்? என்பது பற்றி போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிககை எடுக்க உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலக்கதை
