50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

  தினத்தந்தி
50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பொருளாதார வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என்பதால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் அவர்களது திறனை மேம்படுத்த ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன், துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 50,000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.45.21 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியின் போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு கூலி ரூ.800/- வீதம் பயிற்சி காலத்திற்கு ரூ.5600/- வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலன் பேணுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது திறனையும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2ஏ ல் உதவியாளர் நிலை பதவிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மூலக்கதை