அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது அருகில் இருந்த முக்கிய புள்ளி யார்? - பரபரப்பு தகவல்கள்

புதுடெல்லி, அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ந் தேதி இரவு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், சுமார் 20 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக அமித்ஷாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக ஒரு முக்கிய புள்ளி இருந்தார். அவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால், இந்த சந்திப்பின்போது, அமித்ஷா, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம். மேலும், தி.மு.க. அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறையின் வழக்குகளையும் விரைவுபடுத்தவும் கேட்டுக்கொண்டாராம். யார் அந்த முக்கிய புள்ளி? இந்த சந்திப்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி சொகுசு காரில் திரும்பும்போது, கைக் குட்டையால் முகத்தை மூடியதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல், அவர் அருகே இருந்த முக்கிய புள்ளி யார்? என்றும் கேள்வி எழுந்தது. தற்போது, அந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அருகே இருந்த முக்கிய புள்ளி அபினேஷ். இவர் பாஷ்யம் கட்டுமான நிறுவன தலைவர். கடலூரை சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சர் எம்.பி.சம்பத்தின் நெருங்கிய உறவினர் ஆவார். ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியின்போது, மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றிற்கு பாஷ்யம் ரெயில் நிலையம் என்று பெயர் வைத்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது மீண்டும் மாற்றப்பட்டது. தற்போது, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகியோருக்கு நண்பராக இருக்கும் அபினேஷ், பெரும்பாலும் அமித்ஷாவின் வீட்டில்தான் இருப்பாராம். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தபோது, இவர்தான் அருகில் இருந்தாராம். எடப்பாடி பழனிசாமி தமிழில் பேசியதை இந்தியில் மொழி பெயர்த்து அமித்ஷாவிடம் சொன்னவரும் இவரே. மேலும், அமித்ஷா இந்தியில் கூறியதை தமிழாக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதும் இவர்தான். ஏற்கனவே, அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோதும் அபினேஷ் தான் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
