சென்னை பள்ளிகளுக்கு 2,300 புவிக்கோளங்கள் - மேயர் பிரியா வழங்கினார்

  தினத்தந்தி
சென்னை பள்ளிகளுக்கு 2,300 புவிக்கோளங்கள்  மேயர் பிரியா வழங்கினார்

சென்னை, நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சென்னை பள்ளிகளுக்கு 2,300 புவிக்கோளங்களை(Globe) மேயர் ஆர்.பிரியா வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “மேயரின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் புவியியல் பாடத்தினை எளிதாக கற்கும் வகையில், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா ஒரு புவிக்கோளம் வீதம் 2,300 வகுப்பறைகளுக்கு மொத்தம் ரூ.39.10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாணவர்களின் புவியியல் கற்றல் திறனை மேம்படுத்த மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள அனைத்து சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைக்கு ஒன்று வீதம் 2,300 புவிக்கோளங்களை மேயர் பிரியா இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ம.பிரதிவிராஜ், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன், உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை