திருச்செந்தூர் கோவிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர்,முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் அமைந்துள்ள புராதன சிறப்புமிக்க பஞ்சலிங்கத்தை வழிபடுவது வழக்கம்.இந்த நிலையில், கொரோனா கால காலத்தில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது வரை தொடர்கிறது. மேலும், பஞ்சலிங்கத்துக்கு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறவில்லை.எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைந்துள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள் நடத்தவும், பஞ்சலிங்கத்தை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் கூட்டத்தை நெறிப்படுத்தலாம். இதற்காக தரிசனத்தை மறுப்பது ஏற்புடையதல்ல. பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும் நேரத்தில் பஞ்சலிங்க தரிசனம் அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து கோவில் இணை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பஞ்சலிங்க தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. இதனைதொடர்ந்து பக்தர்கள் பாதுகாப்புக்காக கூட்டம் குறைவாக இருந்தால் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கூட்டத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கக்கூறிய கோவில் நிர்வாகத்தின் முடிவை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மூலக்கதை
