சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  தினத்தந்தி
சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்  உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் 77.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக சைதாப்பேட்டை வாழைத்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதியக் குடியிருப்புகளை பயனாளிகள் உங்களிடத்தில் வழங்குகின்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டினுடைய எந்த பகுதிக்கு சென்றாலும், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் சைதாப்பேட்டை மக்களைச் சந்தித்தால் ஒரு தனி மகிழ்ச்சியும், தனி உற்சாகமும் பிறக்கும். ஏனென்றால் நம்முடைய இயக்கத்திற்கு, இயக்கத்துடைய வரலாறுக்கும் இந்த சைதாப்பேட்டை பகுதிக்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிதான், இந்த சைதாப்பேட்டை தொகுதி. அப்படிப்பட்ட புகழ்பெற்ற, பெருமைபெற்ற இந்த சைதாப்பேட்டை தொகுதிக்கு வருகைதந்து, இந்த புதிய வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை கொடுக்கின்ற வாய்ப்பை எனக்கு அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் முதலில் என்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டில் குடிசை பகுதிகளே இருக்கக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையோடு அனைத்தையும் திட்டமிட்டு செய்தார். இங்கே குறிப்பிட்டதுபோல, 1970-களில் இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அந்த வாரியத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய குடிசை வீடுகளை எல்லாம் அகற்றிவிட்டு, அங்கே கான்கிரீட் வீடுகள் அமையவேண்டும் என்று அந்த திட்டத்தை தீட்டியவரும் கலைஞர்தான். குறிப்பாக, தன்னுடைய சைதாப்பேட்டை தொகுதியில் 1970 ஆம் ஆண்டில், இதே இடத்தில் அவர்தான் 448 குடியிருப்புகளைக் கட்டித்தந்தார். அந்தக் குடியிருப்புகள் பழசான காரணத்தால், இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதல்-அமைச்சர் சுமார் 78 கோடி ரூபாய் செலவில் 504 புதிய குடியிருப்புகளை உங்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படி அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் நம்முடைய கழக அரசு மக்களுக்காக, உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கும். ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 ஆயிரம் வீடுகளை, இந்த வாரியம் மூலமாக நம்முடைய முதல்-அமைச்சர் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்ல, 18 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நம்முடைய முதல்-அமைச்சர் வழங்கி இருக்கிறார். இந்த வீடுகள் எல்லாம் கட்டி முடிக்கப்படும் வரை, நீங்கள் எல்லோரும் வெளியில் தங்கி இருந்தீர்கள். அதற்கான, உதவித்தொகையாக 8 ஆயிரம் ரூபாயை அரசு கொடுத்து வந்தது. நம்முடைய அமைச்சர், உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முதல்-அமைச்சரிடம் சென்று 8 ஆயிரம் ரூபாயை என்பது பத்தவே, பத்தாது என்று குறிப்பிட்டு வலியுறுத்தியதால், நம்முடைய முதல்-அமைச்சர் அவர்கள், அந்த 8 ஆயிரம் ரூபாயை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்கள். இன்றைக்கு கொடுக்கப்படுகின்ற இந்த ஒவ்வொரு வீடும், கிட்டத்தட்ட 300 சதுர அடி இருந்த வீடு, தற்போது 410 சதுர அடியாக உயர்த்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர், சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அங்கு இருக்கக்கூடிய வீடுகளை, அந்த வீடுகளில் தங்கி இருக்கக்கூடிய அந்த மகளிருடைய பெயர்களிலேயே பதிவு செய்து கொடுத்தார். இன்றைக்கு கலைஞர் வழியில் வந்திருக்கக்கூடிய நம்முடைய முதல்-அமைச்சரும், இங்கே ஒதுக்கப்படுகின்ற அத்தனை வீடுகளையும் அங்கு வசிக்கக்கூடிய மகளிருடைய பெயரிலேயே பதிவு செய்து கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் நம்முடைய முதல்-அமைச்சர் போட்ட முதல் கையெழுத்து என்னவென்று உங்களுக்கு தெரியும். அதுதான் மகளிருக்கான அந்த விடியல் பயணத் திட்டம். இந்த விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்காக நம்முடைய முதல்-அமைச்சரும், அரசும் தயாராக இருக்கின்றது. ஆகவே நீங்களும் நம்முடைய அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்றைக்கு புதிய வீடுகளில் குடியேற இருக்கக்கூடிய, உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை