ஆலப்புழா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது காலத்தின் கட்டாயம் - மத்திய மந்திரி சுரேஷ் கோபி

திருச்சூர், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக ஆலப்புழா மாவட்டம் உள்ளது. இதனால் இந்த மாவட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு உகந்த இடமாக உள்ளது. இந்த மருத்துவமனை வர உள்ளதால், ஆலப்புழா மாவட்டம் வளர்ச்சி அடைவது உறுதி. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது காலத்தின் கட்டாயமாகும். இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அதே நேரம் அரசியல் லாபத்துக்காக, ஆலப்புழாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டாம் என்று யாராவது கருதினால், நான் திருச்சூரில் அமைக்க முயற்சிப்பேன். அரசியல் உள்நோக்கத்துடன் அதற்கு தடை விதிக்க யாராவது முயன்றால், பிரதமர், மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்துவேன். திருச்சூரில் இடமில்லை என்றும், திருவனந்தபுரத்தில் எய்ம்ஸ் அமைவதற்கான இடம் தருவதாக தலைமை செயலாளர் தெரிவித்து உள்ளார். திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால், அது எனக்கு பெருமையாக இருக்கும் என்ற பயம் காரணமாக ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
