சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி: இலங்கையை ஒய்ட் வாஷ் செய்தது இந்திய அணி

  தினமலர்
சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி: இலங்கையை ஒய்ட் வாஷ் செய்தது இந்திய அணி

பல்லேகெலே: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை, 3-0 என்ற கணக்கில் வென்றது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று பல்லேகெலேயில் 3வது போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக கலீல் அகமது, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. 'டாப்-ஆர்டர்' சரிவுஇந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. மகேஷ் தீக்சனா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் சமிந்து விக்ரமசிங்கே பந்தில் சஞ்சு சாம்சன் 'டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த ரிங்கு சிங் (1), கேப்டன் சூர்ய குமார் யாதவ் (8) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.ஷிவம் துபே (13) சோபிக்கவில்லை. இந்திய அணி 48 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சூப்பர் ஜோடிபின் இணைந்த சுப்மன் கில், ரியான் பராக் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. வணிந்து ஹசரங்கா வீசிய 14வது ஓவரில் ரியான் பராக் 2 சிக்சர் பறக்கவிட, 15 ரன் கிடைத்தன. கமிந்து மெண்டிஸ் பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட, இந்த ஜோடி 50 ரன் சேர்த்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது ஹசரங்கா பந்தில் சுப்மன் கில் (39) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஹசரங்கா பந்தில் ரியான் பராக் (26) 'பெவிலியன்' திரும்பினார்.கமிந்து மெண்டிஸ் வீசிய 17வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் தலா ஒரு பவுண்டரி விரட்டினர். ரமேஷ் மெண்டிஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய வாஷிங்டன் சுந்தர், தீக்சனா பந்தில் சிக்சர் விளாசினார். பொறுப்பாக ஆடிய வாஷிங்டன் 18 பந்தில் 25 ரன் விளாசினார். கடைசி பந்தில் முகமது சிராஜ் (0) 'ரன்-அவுட்' ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. பிஷ்னோய் (8) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தீக்சனா 3 விக்கெட் சாய்த்தார்.எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. இதன்பின்னர், இந்திய ஸ்பின்னர்கள் அசத்த, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 137 ரன் எடுக்க, ஆட்டம் ‛டை' ஆனது, இதன் பின் நடந்த சூப்பர் ஓவரில், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்த, இலங்கை 2 ரன் மட்டுமே எடுத்தது. 3 ரன் மட்டுமே இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து, வெற்றி பெற வைத்தார். ஆட்டநாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும், தொடர் நாயகன் விருது, சூர்ய குமார் யாதவுக்கும் வழங்கப்பட்டது.

மூலக்கதை