ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை

தினமலர்  தினமலர்
ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம்  2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை

2024ம் ஆண்டின் நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் வரை வெளியான படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 10 படங்கள் வரை கூடுதலாக வெளியாகி உள்ளன.

இந்த 80 படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள். தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவிக்கும் நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல், அஜித் ஆகியோரது படங்கள் இந்த ஆண்டில் இதுவரை வெளியாகவில்லை. அதனால், தற்போதைய தமிழ் சினிமா வசூல் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

கடந்த நான்கு மாதங்களில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், ஜெயம் ரவி, விஷால், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, சந்தானம் ஆகியோரது படங்கள் வெளிவந்தாலும் அவை வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம். தற்போது ஆரம்பமாகியுள்ள கோடை விடுமுறை இந்த வசூல் வறட்சியை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எந்தப் படம் அப்படி ஒரு திருப்புமுனையை ஆரம்பித்து வைக்கப் போகிறது என திரையலகத்தில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

20 படங்கள் ரிலீஸ்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் புதிய படங்கள் வெளியாகும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 5 வெள்ளிக்கிழமைகள் வரும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4, 5, 11, 12, 19, 20, 26 ஆகிய எட்டு நாட்களில் புதிய படங்கள் வெளியாகி உள்ளன. வெளியான படங்களின் எண்ணிக்கை 20.

ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'கள்வன்' படம் வெளியானது. படத்தின் டிரைலர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் ஏமாற்றத்தையே தந்தது. இருப்பினும் படக்குழுவினர் படம் வெற்றி என 'கேக்' வெட்டி கொண்டாடினார்கள்.

ஏப்ரல் 5ம் தேதி “ஆலகாலம், டபுள் டக்கர், இரவின் கண்கள், ஒரு தவறு செய்தால்” என சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியானது. இவற்றில் எந்தப் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தார்கள் என்று கேட்டால் இப்படிப்பட்ட படங்கள் வந்ததா என்று நம்மையே திரும்பிக்கேட்பார்கள்.

ஏப்ரல் 11ம் தேதி ஜிவி பிரகாஷ் நடித்த 'டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இசையமைப்பாளர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறிய இருவரது படங்களும் ஒரே நாளில் போட்டி போட்டன. இரண்டுமே போட்டியில் தோல்வியுற்றது எதிர்பாராத ஒன்று. நல்ல கதைகளைத் தேடி இருவருமே போவது அவர்களுக்குச் சிறந்தது என்ற விமர்சனங்கள் நிறையவே வந்தது.

ஏப்ரல் 12ம் தேதி 'அறிவியல், வா பகண்டையா' ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தது. இரண்டு படங்களைப் பற்றியும் யாராவது கூகுளில் தேடியிருந்தால் கூட அது ஆச்சரியம்தான்.

ஏப்ரல் 19ம் தேதி 'நெவர் எஸ்கேப், வல்லவன் வகுத்ததடா' ஆகிய படங்கள் வெளிவந்தது. இரண்டு படங்களையுமே பார்க்காமல் ரசிகர்கள் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஏப்ரல் 20ம் தேதி 'பைண்டர், ரூபன், சிறகன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 'பைண்டர், சிறகன்' ஆகிய படங்களுக்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், சரியான அளவில் படத்தைக் கொண்டு போய் சேர்க்கவில்லை.

ஏப்ரல் 26ம் தேதி “இங்கு மிருகங்கள் வாழும் இடம், கொலை தூரம், ஒரு நொடி, ரத்னம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'ஒரு நொடி' படத்திற்கான விமர்சனங்கள் படத்தை ஓரளவிற்கு சமாளிக்க வைத்தது. விஷால் நடித்து வெளிவந்த 'ரத்னம்' படம் முதல் நாளில் வசூலித்தது. அதன்பின் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் வசூலைக் குறைக்க ஆரம்பித்தது.

ரீ-ரிலீஸில் கில்லி
ஏப்ரல் மாதம் 20 புதிய படங்கள் வந்தாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 20ல் ரீ-ரிலீஸ் ஆன 'கில்லி' படம் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெளியீடு காரணமாக சில முக்கிய புதிய படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.

எண்பது படங்கள் வரை வெளிவந்தாலும் எட்டமுடியாத வெற்றியை எஞ்சியுள்ள மாதங்களில் வெளியாக உள்ள படங்கள் எட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

ஏப்ரல் 2024ல் வெளியான படங்கள்…

ஏப்ரல் 4 : கள்வன்

ஏப்ரல் 5 : ஆலகாலம், டபுள் டக்கர், இரவின் கண்கள், கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள், ஒரு தவறு செய்தால், ஒயிட் ரோஸ்

ஏப்ரல் 11 : டியர், ரோமியோ

ஏப்ரல் 12 : அறிவியில், வா பகண்டையா

ஏப்ரல் 19 : நெவர் எஸ்கேப், வல்லவன் வகுத்ததடா

ஏப்ரல் 20 : பைண்டர், ரூபன், சிறகன்

ஏப்ரல் 26 : இங்கு மிருகங்கள் வாழும் இடம், கொலை தூரம், ஒரு நொடி, ரத்னம்

மூலக்கதை