இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்

  தினமலர்
இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் 'கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சவுந்தர்யா, தற்போது அமேசான் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நோவா இயக்கத்தில் 'கேங்ஸ் - குருதிப்புனல்' எனத் தலைப்பிடப்பட்ட அந்தத் தொடரில் அசோக் செல்வன், நாசர், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் படப்பிடிப்பு புதுச்சேரியல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சவுந்தர்யா. திட்டமிட்டதை விட இயக்குனர் அதிக செலவு செய்ததால் அமேசான் நிறுவனம் மேற்கொண்டு பணம் தர மறுத்துவிட்டதாம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சவுந்தர்யா படப்பிடிப்பை கேன்சல் செய்யச் சொன்னாராம். மேற்கொண்டு அமேசான் நிறுவனத்துடன் பேசி அவர்கள் கூடுதல் தொகை தர சம்மதித்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர முடியும் நிலை என்கிறார்கள்.

படத்தில் பிஸியான நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால் மீண்டும் அவர்களது தேதிகளை வாங்கி படப்பிடிப்பு நடத்த இன்னும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

மூலக்கதை