வேறொருவருடன் பழகிய காதலி... கண்டித்த வாலிபர்... அடுத்து நடந்த கொடூரம்

பெங்களூரு,கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்பது முதலில் போலீசாருக்கு தெரியவில்லை. மேலும் அவரை யாராவது மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், எரிந்த நிலையில் பிணமாக கிடந்த இளம்பெண்ணை பற்றி அடையாளம் தெரிந்தது. விசாரணையில் அவர், சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா கோவர்ஹட்டி கிராமத்தை சேர்ந்த வர்ஷிதா (வயது 19) என்பதும், அவர் சித்ரதுர்காவில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 14-ந்தேதி ஊருக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் அவர் கடிதம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. அத்துடன், கல்லூரி சீருடையுடன் செல்போனில் பேசியபடி விடுதியில் இருந்து வெளியேறியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வர்ஷிதாவை அவரது காதலன் சேத்தனே கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. அதாவது, வர்ஷிதாவும் சேத்தனும் காதலித்து வந்துள்ளனர். சேத்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3-வது நிலையில் உள்ளார். இந்த நிலையில் வர்ஷிதா வேறொரு வாலிபருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இது சேத்தனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வர்ஷிதாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வர்ஷிதாவுக்கு போன் செய்து சேத்தன் வரவழைத்துள்ளார். கோனூருக்கு செல்லலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வைத்து வேறொருவருடன் பழகுவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சேத்தன், வர்ஷிதாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்து வர்ஷிதா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு சேத்தன் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பக்குதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலக்கதை
