வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்புகிறது மும்பை

மும்பை,மும்பையில் 4 நாட்களாக இடை விடாமல் பலத்த மழை பெய்தது. இதில் கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. பல இடங்களில் வீடு, கடைகளில் மழை நீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர். சாலைகள், தண்டவாளங்கள், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பஸ், மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழையின் தீவிரம் குறைந்தது. இதனால் மும்பை நகரில் பல இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்தது. இருப்பினும் பரேல் இந்துமாதா, கிங்சர்க்கிள் உள்பட பல இடங்களில் வெள்ளம் முற்றிலும் வடியாமல் தேங்கி உள்ளது. மத்திய ரெயில்வேயின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே 8 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகள் 15 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 3 மணி முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கத்தொடங்கியது. தற்போது அனைத்து வழித்தடத்திலும் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுவதாக மத்திய ரெயில்வேயின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் பஸ்களும் வழக்கம் போல் ஓடத்தொடங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதனால் மும்பையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.
மூலக்கதை
