துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

  தினத்தந்தி
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

புதுடெல்லி, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவால் இந்திய துணை ஜனாதிபதி பதவி காலியானதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் கமிஷன் அதற்கு தேர்தலை அறிவித்தது. இதன்படி அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த 17-ந் தேதி நடந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக, மராட்டிய மாநில கவர்னராக இருக்கும், கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவருக்கு போட்டியாக எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் துணை ஜனாதிபதி வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதனை நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி உறுதியாகி இருப்பதால், ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதனால் ஆளும் கூட்டணி சார்பிலான துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல மத்திய மந்திரிகள், கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் முன்னிலையில் தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள மாநிலங்களவை பொதுச்செயலாளர் பி.சி.மோடியிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு 4 தொகுப்புகளாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் முதல் தொகுப்பில் பிரதமர் மோடி பிரதானமாக முன்மொழிந்துள்ளார். பிற தொகுப்புகளில் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் ராஜன் ரஞ்சன்சிங் ஆகியோர் முதன்மை முன்மொழிவாளர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக சுதர்சன் ரெட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

மூலக்கதை