மழையின் தீவிரம் குறைந்தது: இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பை

மும்பை, மகாராஷ்டிராவில் மும்பை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் மத்திய மராட்டியத்தின் மலையோர பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று 2-வது நாளாக சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே பெய்த கனமழையால் மக்கள் பரிதவித்து வந்த நிலையில், நேற்று பெய்த அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. குறிப்பாக மும்பையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழையும், 6 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழையும் பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மித்தி நதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் குர்லாவில் உள்ள குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். மழையால் கடும் சிரமத்தை சந்தித்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை சற்று குறையத்தொடங்கியது. இன்று காலை முதல், சாலைப் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். மும்பையின் முக்கிய பகுதியான அந்தேரியில் கடந்த சில நாட்களாக கடைகளை மூடியே வைத்திருந்த வணிகர்கள், இன்று கடைகளை திறந்தனர். கடைகளின் உள்பகுதியையும், வீதிகளையும் அவர்கள் சுத்தப்படுத்தினர். நாளை முதல் மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூலக்கதை
