மராட்டியத்தில் விபத்து; பிரசவத்திற்காக வந்த இடத்தில் தாய், கர்ப்பிணி மகள் பலி

  தினத்தந்தி
மராட்டியத்தில் விபத்து; பிரசவத்திற்காக வந்த இடத்தில் தாய், கர்ப்பிணி மகள் பலி

நாசிக், மராட்டியத்தின் நாசிக் நகரில் முக்திதம் கோவில் அருகே 2 பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது, விரைவாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதன்பின்னர் கார் ஒன்றின் மீதும் மற்றும் 2 ஆட்டோக்களின் மீதும் லாரி மோதியது. இந்த சம்பவத்தில், சுனிதா வாக்மரே (வயது 50) என்ற பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அவருடைய கர்ப்பிணி மகளான ஷீத்தல் கேதரே (வயது 27) படுகாயமடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய குழந்தை பிறக்காத நிலையில், நேற்றிரவு உயிரிழந்தது. ஷீத்தல், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார். கர்ப்பிணியான அவர், பிரசவத்திற்காக பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தாயுடன் வெளியே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை