டி.வி. சீரியல் மூலம் கிடைத்த யோசனை... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மனோஜ் குமார் ராய்கர்(வயது 35) என்ற நபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு கால்பந்து மைதானத்திற்கு அருகில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லாததாலும், கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததாலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட மனோஜ் குமாரின் மனைவி சந்தோஷிக்கு ஒரு கள்ளக்காதலன் உள்ளார் என்ற விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவரது கள்ளக்காதலன் ரிஷி ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது நண்பர் மோஹித் சர்மா ஆகியோரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சந்தோஷி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் சி.ஐ.டி. என்ற டி.வி. சீரியலையும், சில வெப் தொடர்களையும் பார்த்து கொலைக்கான யோசனை தனக்கு வந்ததாக விசாரணையில் சந்தோஷி தெரிவித்துள்ளார். காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக புதிய சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தியதாக சந்தோஷி கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷியையும், அவரது கள்ளக்காதலன் மற்றும் நண்பரை கைது செய்துள்ளனர்.
மூலக்கதை
