அதிர்ச்சியில் இருந்தேன்; தற்போது... தாக்குதலுக்கு பின் முதல்-மந்திரி ரேகா குப்தா பேட்டி

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி ரேகா குப்தா மக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது, அவரிடம் சில ஆவணங்களை கொடுப்பது போன்று கொடுத்து விட்டு, திடீரென அவரை தாக்கினார். இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தாக்குதலை நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ராஜேஷ் கிம்ஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் முதல்-மந்திரி ரேகா குப்தாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூறும்போது, நான் இன்று காலை மக்கள் குறைகளை கேட்டபோது, என் மீது நடந்த தாக்குதலானது, ஒரு தாக்குதல் என்ற அளவில் இல்லாமல், டெல்லிக்கு சேவை செய்வது மற்றும் மக்கள் நலனிற்காக பணியாற்றுவது ஆகியவற்றிற்கான நம்முடைய தீர்மானத்திற்கு எதிரான கோழைத்தன முயற்சி ஆகும். அப்போது நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால், தற்போது நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மூலக்கதை
