மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி;அழகி பட்டம் வென்ற ராஜஸ்தான் கல்லூரி மாணவி

  தினத்தந்தி
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி;அழகி பட்டம் வென்ற ராஜஸ்தான் கல்லூரி மாணவி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா-2025’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர், நவம்பரில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் 74-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார். இறுதி போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகுப் பெண்கள் போட்டியிட்டனர். இறுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா-2025 பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டில் இந்த போட்டியில் பட்டம் வென்ற ரியா சிங்கா மகுடம் சூட்டினார். இறுதி சுற்றின்போது, பெண் கல்விக்காக வாதிடுவது மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பொருளாதார உதவி வழங்குதல் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள், ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் பெண் கல்வி என்ற விருப்பத்தையே தேர்ந்தெடுப்பேன். இது ஒரு நபரின் வாழ்க்கையை மட்டும் மாற்றாது. அது இந்த நாட்டின், இந்த உலகின் எதிர்காலத்தின் முழு அடுக்குகளையும் மாற்றும்” என பதில் அளித்தார். மணிகா, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரை சேர்ந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இறுதி ஆண்டு மாணவியான மணிகா, கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை