‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ அமித்ஷா பதிவு

  தினத்தந்தி
‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ அமித்ஷா பதிவு

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடியது. அப்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார். யூனியன் பிரதேசங்கள் அரசு (திருத்தம்) மசோதா-2025. அரசியல் சாசன (130-வது திருத்தம்) மசோதா-2025. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா-2025 ஆகிய 3 மசோதாக்களை தாக்கல் செய்தார். பிரதமர், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள் ஆகியோர் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்கள் பதவி பறிபோக இந்த மசோதாக்கள் வழிவகை செய்கின்றன. ‘‘யூனியன் பிரதேசங்கள் அரசு-1963 சட்டத்தில், கடுமையான குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்படும் முதல்-மந்திரிகள், மந்திரிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய விதிமுறை இல்லை. எனவே, அவர்களது பதவியை பறிக்க அந்த சட்டத்தின் 45-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 3 மசோதாக்களையும் அமித்ஷா தாக்கல் செய்தார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி எம்.பி. பிரேம சந்திரன் ஆகியோர் அறிமுக நிலையிலேயே மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சிறையில் இருந்தபடி, பிரதமரோ, முதல்-மந்திரிகளோ அல்லது மந்திரிகளோ அரசாங்கத்தை நடத்துவது சரியா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்யட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை