2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்

  தினத்தந்தி
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்

மும்பை, கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் நிலைத்து விளையாடிய கவுதம் கம்பீருடன் சேர்ந்த கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக அந்த தொடரில் அட்டகாசமான பார்மில் இருந்த யுவராஜுக்கு முன்பே களமிறங்கிய அவர் தொடர் முழுவதும் தடுமாறிய போதிலும் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில் அந்த இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கிய காரணம் பற்றி தோனி பகிர்த்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கம்பீர் - விராட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். யுவராஜ் நல்ல பார்மில் இருந்தார். எனவே யுவராஜ் செல்ல வேண்டுமா அல்லது நான் செல்ல வேண்டுமா என்ற இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு இருந்ததால் நான் செல்ல விரும்பினேன். அதற்கான காரணம் அனுபவத்தைப் பொறுத்த எளிமையான ஒன்றாகும். இலங்கை அணியின் பவுலிங் வரிசையை பார்க்கும்போது மிடில் ஓவர்களை முரளிதரன் சார், சூரஜ் ரந்தீவ் ஆகியோருடன் பகுதி நேர பவுலர் தில்ஷன் இருந்தார். அவர்கள் மூவருமே ஆப் ஸ்பின்னர்கள். அதில் முரளி சார் மற்றும் சூரஜ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளனர். அப்படியானால் அவர்களை நான் வலைப்பயிற்சியில் அதிகமாக எதிர்கொண்டிருப்பேன். எனவே ஆப் ஸ்பின்னர்களான அவர்களை வலது கை பேட்ஸ்மேனான நான் எதிர்கொள்வது கொஞ்சம் எளிதாக இருக்கும். கம்பீருடன் நான் அதிகமாக பேட்டிங் செய்ததில்லை. ஆனால் ஜிம்பாப்வே, கென்யாவில் இந்தியா ஏ அணிக்காக நாங்கள் சேர்ந்து விளையாடியுள்ளோம். அதனால் எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது. அப்போது அந்த புரிதலும் இடது - வலது கை ஜோடி கலவையும் தேவைப்பட்டது. இந்த ஐடியாவுடன் நான் முரளிதரன், சுரஜை ஆரம்பக்கட்ட 2-4 ஓவர்களில் நன்றாக எதிர்கொள்ள முடியும் என்று நினைத்தேன்" என கூறினார்.

மூலக்கதை