பிறந்தநாளில் சுவரொட்டி வெளியீடு: ‘காதி’ படத்தில் ஆவேசம் காட்டும் அனுஷ்கா

  தமிழ் முரசு
பிறந்தநாளில் சுவரொட்டி வெளியீடு: ‘காதி’ படத்தில் ஆவேசம் காட்டும் அனுஷ்கா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாக உள்ள புதுப்படம் குறித்த அறிவிப்பும் அதன் முதல் தோற்றச் சுவரொட்டியும் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்பு ‘அருந்ததி’ என்ற பேய் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அனுஷ்கா. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி பலத்த வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில், தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் அனுஷ்கா. இதையடுத்து கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காதி’ என்ற படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்படத்தில் அனுஷ்கா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அதில், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, ரத்தம் தெறிக்கும் நிலையில் ஆவேசமாகக் காட்சி அளிக்கிறார் அனுஷ்கா. கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருந்ததி’ படத்தில் எவ்வாறு தோற்றமளித்தாரோ, அதேபோல் இப்போதும் மிரட்டலாக காட்சி அளிப்பதாக அனுஷ்காவின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்தப் படத்தை யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இதே நிறுவனம் ஏற்கெனவே அனுஷ்கா நடிப்பில் மூன்று படங்களைத் தயாரித்துள்ளது. “அனுஷ்காவின் கண்கள் சக்தி வாய்ந்தவை. இரு கண்களுக்கு மத்தியில் நெற்றியில் பொட்டு வைத்து, அவர் ஆவேசமாகப் பார்த்தால் எத்தகைய துணிச்சல் கொண்டவரும்கூட பயத்தில் ஓட்டம் பிடிப்பார்.“அதை மனதில் கொண்டுதான் தலை, கைகளில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அவர் கோபமாக இருப்பதாகச் சித்திரித்து காணொளியை வெளியிட்டுள்ளோம்.“இதனால் அவரது கதாபாத்திரம் பொதுவான ரசிகர்களிடமும்கூட ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது மனித நேயம், உயிர் வாழ்தல் குறித்து ஆராயும் படம் எனலாம். சரி, தவறு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட வரலாற்று நாயகியின் கதை,” என்கிறார் இயக்குநர் கிரிஷ்.இதுவரை இல்லாத வகையில் அதிரடி நாயகியாக இந்தப் படம் முழுவதும் அனுஷ்கா வலம்வருவார் என்று கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே சத்தமின்றி தொடங்கி, கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டனர்.மனோஜ் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். மேலும், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்துள்ளனர்.தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். முதலில் தெலுங்கில் நாயகியாக அறிமுகமான அனுஷ்கா, தமிழில் மாதவனின் ஜோடியாக ‘ரெண்டு’ படம் மூலம் அறிமுகமான பின்னர் விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’, அஜித்துடன் ‘என்னையறிந்தால்’, ரஜினியுடன் ‘லிங்கா’, சூர்யாவுடன் ‘சிங்கம்’ உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார்.அனைத்துக்கும் உச்சமாக ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களிலும் நாயகியாக நடித்து அசத்தி இருந்தார் அனுஷ்கா.

மூலக்கதை